தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள படேல் மண்டபத்தில் மேயர் கே.சரவணன் தலைமையிலும், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் ஆணையர் லட்சுமணன் முன்னிலையிலும் இன்று (ஜூலை 24) நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் தொடக்கத்திலேயே மேயர் கே.சரவணன் மற்றும் துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மாமன்ற உறுப்பினர்களின் முழு சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ச.அய்யப்பன், மத்தியில் ஆளும் பாஜக அரசு நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததாக மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்க, அந்த தீர்மானமும் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, அதிமுக மாமன்ற உறுப்பினர்களான பத்ம குமரேசன், ஆதிலட்சுமி ராமமூர்த்தி, கௌசல்யா வாசு ஆகியோர், கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி ஒரு பாட்டிலில் சுகாதாரமற்ற குடிநீரை மாமன்றக் கூட்டத்திற்கு கொண்டு வந்து காண்பித்து, அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் லட்சுமணன் உறுதியளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ரூ.2 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 435 மதிப்பிலான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 11 தீர்மானங்களை இன்றைய கூட்டத்தில் மேயர் விவாதப் பொருளாக வைக்காததன் காரணத்தைக் கேட்டும், அதனை நிறைவேற்றிட துணை மேயர் மற்றும் பிற மாமன்ற உறுப்பினர்கள் பலர் எழுந்து ஆவேசமாக பேசிய வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், மேயர் சரவணன் எதுவும் கூறாமல் தனது இருக்கையை விட்டு எழுந்து சிறிது நேரம் வெளியே சென்றுவிட்டு மீண்டும் அவைக்கு வந்த மேயர், "நான் அந்த பணிகளை விரைவில் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே மன்ற பொருளாக விவாதத்திற்கு வைப்பேன். என்னால் தற்போது நடைபெற்று வரும் பணிகளுக்கு பாதிப்பு இருக்காது என திட்டவட்டமாக கூறி கூட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்தார்.
சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமமுக கவுன்சிலர் (Credits - ETV Bharat Tamil Nadu) இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, தஞ்சாவூர் மாநகராட்சி 36வது வார்டு பகுதிகளான பூக்கார வடக்கு தெரு, 1ஆம் தெரு, 2ஆம் தெரு, மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பாதாளச் சாக்கடை கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது என கூறி 36வது வார்டு அமமுக கவுன்சிலர் கண்ணுக்கினியாள், பாதாளச் சாக்கடை சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து இன்று திடீரென தஞ்சை மேரிஸ் கார்னர் பகுதியில் உள்ள சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:மக்களுடன் முதல்வர் திட்டத்திற்காக அரசுப் பள்ளிக்கு விடுமுறையா? நத்தம் அருகே நடந்தது என்ன?