மயிலாடுதுறை : மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை அவசரச் சிகிச்சைப் (ஐசியு) பிரிவில் ஒரே சிரஞ்சைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு வைரலாகியது.
தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் தனது தாயார் கல்யாணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், கடந்த 27ம் தேதி மயிலாடுதுறை அரசினர் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு பணியில் உள்ள செவிலியர்கள் ஒரே சிரஞ்சியைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக குற்றம் சாட்டி செல்போனில் வீடியோ எடுத்து செவிலியரிடம் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு செவிலியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : "ரஜினி சொன்ன குதிரை சாமி முனீஸ்வரர் தான்".. 51 தேங்காய்கள் உடைத்து ரசிகர்கள் சிறப்பு பூஜை!
இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு, மயிலாடுதுறை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் நேரிடையாக புகார் மனு அளித்தார். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில், உண்மை தன்மை இருப்பது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்தன.
அதன் அடிப்படையில் இச்செயலை செய்த செவிலியர் ஒருவரை தற்காலிக பணிநீக்கம் செய்தும், அவர்மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதிக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற செயல்களில் எந்த செவிலியர்களும் ஈடுபடக்கூடாது எனவும், அவ்வாறு ஈடுபடும் பட்சத்தில் தொடர்புடைய செவிலியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்