சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, தமிழக உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக கோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மின்வாரியத் துறைத் தலைவராக நந்தகுமார் ஐஏஎஸ், சமூக நலத் துறை ஆணையராக லில்லி ஐஏஎஸ் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி ஐஏஎஸ், கல்லூரி கல்வித் துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக விஷ்ணு சந்திரன் ஐஏஎஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'அதிசயமே அசந்து போகும்'.. கண்களைக் கவரும் புதிய பாம்பன் ரயில் பாலம்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
கைத்தறி, காதிதுறை செயலாளராக அமுதவள்ளி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜவுளித்துறை இயக்குனராக லலிதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளர். பொதுத் துறை துணைச் செயலராக பவன்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூவிற்கு கூடுதல் பொறுப்பாக விலங்குகள் கால்நடை மற்றும் மீன்வளத் துறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழக தலைவர் ஸ்வர்னா, ரூசா திட்ட மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை துணை செயலாளர் பிரதீவ் ராஜ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கலால் துறை ஆணையராக பதவி வகித்த, ஜெயகாந்தன் தமிழக நீர்நிலை மேம்பாட்டு திட்ட நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை செயலராக விஜயராஜ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழக சிறு தொழில் வளர்ச்சி கழக தலைவராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.