நீலகிரி: உலகம் முழுவதும் நாளை (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதில், காதலர் தினத்தை வெளிப்படுத்தும் விதமாக ரோஜா முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரோஜா முக்கிய இடம் பெற்றாலும், சிகப்பு வண்ணங்களில் உள்ள ரோஜாக்களுக்கு விலை கூடியுள்ளது. ஒரு ரோஜா மலருக்கு ரூ.50 விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதே போல, நீலகிரியில் வில்லியம், ஜெர்பரா, கார்னேஷன் கொய் மலர்களுக்கு தற்போது தேவைகள் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 220 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட வில்லியம் கொய் மலர்களுக்கு 10 பூக்கள் அடங்கிய ஒரு கொத்து 240 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரியில் உற்பத்தியாகும் இவ்வகை மலர்கள் திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் பயன்பட்டு வந்தது. ஆனால், தற்போது காதலர் தினத்திற்கு இந்த மலர்களின் விலை உயர்ந்துள்ளது. இவ்வகை பூக்கள் தற்போது பல்வேறு வகையான பூங்கொத்துக்கள் கொடுப்பதற்கு, ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வகை மலர்கள் சென்னை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்குக் கொண்டு சென்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பணிகள் நடந்து வருகிறது.