சென்னை: இந்தியாவின் 78 வது சுதந்திரதின விழா வரும் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு கடந்த இரண்டு மாதங்களில் 10 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததை அடுத்து, ஏற்கனவே 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பாக உச்சகட்ட பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 7 அடுக்கு பாதுகாப்பு வரும் 20 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் வெளிவட்ட பகுதியில் சென்னை மாநகர போலீசாரும், உள்வட்ட பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையிடுகின்றனா். அதைப்போல் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் பரிசோதிக்கின்றனர். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து வந்து கண்காணிக்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அதோடு முக்கிய பிரமுகர்களை வரவேற்க வருபவர்களுக்கு வழங்கப்படும்பி சிஏஎஸ் பாஸ்களிலும், கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.