ஈரோடு: பாஜகவின் தெற்கு மாவட்ட தொழில் துறை பிரிவு மாநாடு, ஈரோடு அடுத்துள்ள அவல்பூந்துறை பகுதியில் இன்று (பிப்.14) நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் பங்கேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.நாகராஜ் பேசியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மிகப்பெரிய முதலீடு ஈர்க்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், 60ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெரும் அளவில் அதானி, அம்பானியின் நிறுவனம்தான் முன் வந்தது.
சோமனூர் விசைத்தறி கூடம், பல்லடம் பகுதியில் கோழிப்பண்ணை, நாமக்கல் போர்வெல் தொழிற்சாலைகள் ஆகியவை மோசமான நிலையில் உள்ளன. பாரம்பரிய தொழில்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிராக்டர், திமுக நிர்வாகிகளுக்குத்தான் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் 'PM-கிஷான் நிதி' 40 லட்சத்தில் 20 லட்சம் பயனாளர்களாகக் குறைந்துள்ளது. பல மருத்துவமனைகளில் ஆயுள் காப்பீடுகள் பயன்பாடு பிரச்சினை உள்ளது. அரசிடம் இருந்து பணம் முறையாக வராததே இதற்கான காரணம்.
அவிநாசி - அத்திக்கடவு திட்டம், கடந்த ஆட்சியில் 90 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 10 சதவிகிதப் பணியை மூன்று ஆண்டுகளாகத் தமிழக அரசு செய்து வருகிறது. விரைந்து அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
அரிசி கிலோ 10 ரூபாய் விலை ஏற்றத்திற்கான முக்கியக் காரணம், நெல் சாகுபடி குறைந்துள்ளதுதான். அக்ஷயா விதையைத் தமிழக அரசு உற்பத்தி செய்து தரவில்லை. பெரும் மகசூல் தரும் அக்ஷயா விதை உற்பத்தியை விவசாயிகள் மத்தியில் ஊக்கப்படுத்த வேண்டும்.
பாஜக குடும்பம் சார்ந்த கட்சி இல்லை. கூட்டணிக்காகக் குழு என்று அமைக்கப்பட்டுள்ளது. திமுகவில் கூட கூட்டணி இறுதி செய்யவில்லை. பாஜக தேசிய கட்சி என்பதால், காலதாமதம் ஏற்படும். கூடிய விரைவில் தேசியத் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பர். வருகின்ற 17, 18 ஆகிய தேதிகளில் தேசிய பாஜக கூட்டத்திற்குப் பிறகு, பாஜக கூட்டணி மிகப்பெரிய அளவில் அமைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏராளமான அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக அதிக அளவில் வெற்றி பெற்ற நிலையில் கூட, தமிழகத்தில் பாஜக வெற்றி பெறவில்லை. திமுக தான் வெற்றி பெற்றது.