திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை, நாலு மூக்கு, ஊத்து காக்காச்சி உள்ளிட்ட பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதாகப் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது தேயிலைத் தோட்ட நிறுவனமான பிபிடிசி நிர்வாகம் இந்த வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாங்கி தேயிலைத் தோட்டம் அமைத்தது. குத்தகை காலம் விரைவில் முடிவடைய இருப்பதால், தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிறுவனம் முன்கூட்டியே விருப்ப ஓய்வு கொடுத்துள்ளது.
ஆனால் இயற்கையான சூழல், மனநிறைவான வேலை என கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் மாஞ்சோலையை விட்டுப் பிரிய மனமில்லாமல் தமிழக அரசே தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் அல்லது தொடர்ந்து அங்கு வசிக்க நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், குத்தகை காலத்துக்கு பிறகு அந்த இடம் அனைத்தும் காப்புக்காடாக மாற்றப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழக அரசு அதை ஏற்று நடத்துவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் எப்படியாவது மாஞ்சோலையில் தான் வசிக்க வேண்டும் என தொழிலாளர்கள் உறுதியோடு கடந்த இரண்டு மாதங்களாகப் போராடி வருகின்றனர். ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்தும் போட்டு விட்டதால் வேலையும் இழந்து வருமானமின்றி நடுக்காட்டில் தவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட மாஞ்சோலையில் கஞ்சி தொட்டி திறந்து தொழிலாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும். இதுதொடர்பாக தொழிலாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மாஞ்சோலை சம்பவம் தொடர்பாக நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.
தொழிலாளர்களின் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாகவும், அவர்களின் வாழ்வுரிமை மறுக்கப்படுவதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கை மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்வார் எனக்கோரி வழக்கை முடித்து வைத்தது.
இந்த நிலையில் வழக்கில் எதிர் மனுதாரராக மாவட்ட ஆட்சியர் இருப்பதால் இந்த வழக்கை அவர் விசாரிப்பது முறையாக இருக்காது எனவும், அதனால் வழக்கில் மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையமே களத்திற்கு வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முத்துராமன் மீண்டும் புகார் மனு அளித்திருக்கிறார். இந்த புகார் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மாஞ்சோலை தோட்டத்தை வனப்பகுதியாக மாற்றக்கோரிய வழக்கு.. ஆக.14ம் தேதி விரிவான விசாரணைக்கு ஒத்திவைப்பு!