ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் - மகேஸ்வரி தம்பதியினரின் மகன் சுபாஷ். சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் - சித்ரா தம்பதியினரின் மகள் மஞ்சு ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்திற்கு மஞ்சுவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மார்ச் 6ஆம் தேதி, சுபாஷ் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது தங்கையை, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதற்காக ஸ்கூட்டரில் சென்றபோது, சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் நெசவாளர் காலனி என்ற இடத்தில் பிக்கப் வேனில் அதிவேகமாக வந்த மஞ்சுவின் தந்தை சந்திரன், சுபாஷ் மற்றும் அவரது தங்கை இருவரும் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில், தங்கைக்கு பலத்த காயம் அடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பவானிசாகர் போலீசார், தனிப்படை அமைத்து மஞ்சுவின் பெற்றோர் சந்திரன், சித்ரா, அவர்களது உறவினர்கள் வடிவேல், கார்த்திக், கொலை செய்ததும் சந்திரன் மற்றும் சித்ரா இருவரையும் தப்பிக்க வைக்க உதவிய அம்மாசை குட்டி, ஜெகதீஷ் ஆகிய ஆறு பேரை கைது செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தற்போது, சுபாஷின் வீட்டிற்கு காவல்துறை சார்பில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரபல வழக்கறிஞர் ப.பா.மோகன், இன்று (மார்ச் 10) சுபாஷின் வீட்டிற்கு வந்து, இது சம்பந்தமாக சுபாஷின் பெற்றோர் ஜெயபிரகாஷ், மகேஸ்வரி, சுபாஷின் மனைவி மஞ்சு ஆகியோரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.