கோயம்புத்தூர்:சவுக்கு சங்கர் சமீபத்தில் யூடியுப் சேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களைத் கூறியதாக சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை சுமார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கடந்த சனிக்கிழமை சவுக்கு சங்கரை கைது செய்த கோவை சைபர் கிரைம் போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை சனிக்கிழமை சிறையில் அடைக்கும் போது, அவருக்கு ஆபத்து உள்ளதாகவும்; ஆகையால், அவரை முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தோம். அதன்படி, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இந்த வழக்கு குறித்து அவரைச் சந்திப்பதற்காக சிறைக்குச் சென்று பார்த்த பொழுது அதிர்ச்சியாக இருந்தது.
சிறையில் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு சவுக்கு சங்கரை ஒரு அறையில் அடைத்து, கண்களைக் கட்டி பத்துக்கும் மேற்பட்ட வார்டன்கள் பிளாஸ்டிக் பைப்களில் துணியைக் கட்டி அடித்துள்ளதாகவும், அதில் அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறினார். ஆனால், தற்போது வரை எலும்பு முறிவு ஏற்பட்ட கைக்கு 'எக்ஸ்ரே' உள்ளிட்ட எந்த ஒரு சோதனைகளும் எடுக்கப்படவில்லை. அவருடைய விருப்பத்திற்கு மாறாக 'வலி நிவாரணி' மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ளக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
ஆகவே, சவுக்கு சங்கர் வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும், அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் மனு அளித்துள்ளோம்.