தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் சேகர் பாபு மீது அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளதாக டி.எஸ்.சங்கர் பேட்டி! - Ammani Amman Math issue

Sekar Babu: பாரதிய ஜனதா கட்சி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மீது அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளதாக அக்கட்சியின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் டி எஸ் சங்கர்
அமைச்சர் சேகர் பாபுவின் மீது அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளோம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 4:19 PM IST

அமைச்சர் சேகர் பாபு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தினால் அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதில், அம்மணி அம்மன் மடம் பெங்களூர் வையாபுரி செட்டியார் அறக்கட்டளை நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இடிக்கப்பட்ட பகுதிகளை இந்து அறநிலையத்துறை மீண்டும் கட்டித்தர வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை அம்மணி அம்மன் மடம் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததாகவும், அப்போது அந்த இடத்தை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சியின் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத் தலைவர் டி.எஸ்.சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “திமுகவின் ஒட்டு மொத்த கூடாரமும் பொய் புகட்டாலயம். பொய்களை பரப்புவதற்காக பாஜக வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி நடத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்மணி அம்மன் மடம் இடிப்பு விவகாரத்தில், திமுகவினர் பொய்யான தகவல்களை அளித்து மடத்தை இடித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், தற்போது அம்மணி அம்மன் மடம், பெங்களூர் வையாபுரி செட்டியார் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பாஜக நிர்வாகிகள் மீது அவதூறாக பொய் பரப்புவர்கள் திமுகவினர். பொய்யான பத்திரங்களை உருவாக்கி, ஏரி நிலத்தை ஆக்கிரமித்து, ஒட்டுமொத்த பொது சொத்துக்களை சூறையாடுவதற்கும், கொள்ளயடிப்பதற்கும் ஒரு யுனிவர்சிட்டி வைத்திருப்பது திமுகவினர். இதற்கு முதலமைச்சரின் பதில் என்ன?

மேலும், அமைச்சர் சேகர் பாபு, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை மாற்றி பேட்டியளித்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தங்களது கல்லூரிக்கு அங்கீகாரம் வாங்குவதற்காக 21.5 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியான ஏரி நிலத்தை, வேறொருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். திமுக அரசு, பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களையோ, தலைவர்களையோ ஆதாரம் இல்லாமல் அராஜகப்போக்கில் அடிபணிய வைக்க நினைத்தால், நாங்கள் நீதிமன்றத்தில் உரிய நீதியைப் பெறுவோம்.

சட்டத்தைப் பற்றி கவலைப்படாமல் பொது சொத்துக்களை கொள்ளையடிக்கும் திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். திமுகவில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் ஊழல் புகாரில் உள்ளனர். இதற்கு பதில் சொல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவை விமர்சிப்பது வெட்கமான ஒன்று.

எனவே, பாரதிய ஜனதா கட்சி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மீது அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளது. மேலும், திருவண்ணாமலையில் உள்ள திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை வைத்துள்ளார்கள் என்பது குறித்த பட்டியல்களை நாங்கள் வெளியிடப் போகிறோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் என்பவர் பதவி ஏற்றது செல்லாது என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பதவியை உடனடியாக, அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் ரத்து செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், திருக்கோயில் நிர்வாகத்தினரும் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம்.. ஈஸியாக நீங்களே அப்டேட் செய்வது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details