சென்னை: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியின்படி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பாக எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று (நவ.16) பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 திருமுருகன் காந்தி, அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேடையில் பேசியதாவது, “மத்தியில் பாசிச ஆட்சி நடத்தி வரும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருவகிறது. பிரதமர் மோடியை, தமிழகத்தில் பாசிச ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் சந்தித்து விட்டு வந்த நாள் முதல் அவரது செல்ல பிள்ளையாக மாறிவிட்டார்.
இந்திய அளவில் இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவது குறித்து இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட குரல் கொடுக்காதது ஏன்? இரட்டை வேடம் போடும் கட்சி திமுக, அதன் தலைவர் ஸ்டாலின். 2006ல் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது இஸ்லாமியர்களுக்கான 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டது. அதற்கடுத்த ஆட்சிக்கு வந்த திமுக அதனை நடைமுறைப்படுத்தியது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மேடையில் பேசியதாவது, “சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதில்லை என்று சமூக நீதி அரசு சொல்லலாமா? சமூக நீதி அரசு, திராவிட முன்னேற்றக் கழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மறுக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீட்டை வழங்குங்கள். நீண்ட நாட்களாக சிறையில் இருக்கக்கூடிய இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள்” என்றார்.