புதுக்கோட்டை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட துரை வைகோ 5,42,213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையா 2,29,119 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் மூன்றாவது முறையாக பெருங்கொண்டான் விடுதி, பெருங்களூர், மங்களத்துப்பட்டி, கருக்குடையான் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து துரை வைகோ, சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அந்த சுற்றுப்பயணத்தின் போது மக்களிடம் பேசிய துரை வைகோ, "சட்டசபை உறுப்பினருக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஒரு எம்பிக்கு 6 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து 5 கோடி ரூபாய் நிதிதான் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 80 லட்சம் ரூபாய் மட்டுமே என்னால் நிதி ஒதுக்க முடியும். ஆகையால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்.
மேலும், இரண்டு மாதங்களாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, குறைகளையும் கேட்டு வருகிறேன். இனி வரும் காலங்களில் மக்கள் தங்களுடைய எந்த கோரிக்கையாக இருந்தாலும், திருசியில் உள்ள எம்.பி அலுவலகத்தில் மனுவாக கொடுத்து விடுங்கள், அங்கிருந்து உங்கள் கோரிக்கை எனக்கு வந்துவிடும்.