சென்னை:அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (டிச.15) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தொழிலதிபர் ரத்தன் டாடா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பொதுக்குழுக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி (ETV Bharat Tamil Nadu) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தீர்மானம்.
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும், மத்திய அரசால் இயற்றப்படும் சட்டங்களின் பெயர்களை இந்தியில் வைப்பதை தவிர்த்து, ஆங்கிலத்தில் தொடர மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்து, நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்
- இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
- கோதாவரி - காவிரி, பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு- புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- ஃபார்முலா 4 பந்தயம், பேனா நினைவு சின்னம் உள்ளிட்டவற்றிற்காக நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க திமுக அரசை வலியுறுத்தி தீர்மானம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் செல்லும் வழியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்" - தமிழக அரசு தகவல்!