மதுரை:மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய இ - சேவை மையத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.
செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போது பேசிய அவர், "மதுரை மேற்குத் தொகுதியில் பொதுமக்களின் நலனுக்காக 21 லட்சம் மதிப்பீட்டில் இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த இ-சேவை மையத்திற்கான அனைத்து உபகரணங்களும் பொதுப்பணித் துறை சார்பில் வழங்கப்படுகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இங்கு இருப்பிட சான்று,பிறப்பு சான்று, இறப்பு சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்கள் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாஜகவுக்கும் எங்களுக்கும் ஒட்டுறவு இல்லை என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், நேற்று நானும் கூறிவிட்டேன். எதற்காக இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம்? இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது;தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது என்பதாலும்தான்.
இடைத்தேர்தல் என்றாலே புது, புது யுக்திகளை திமுக சட்டத்திற்கு புறம்பாகச் செய்யும். பணம் ஆறாக ஓடும். மக்களை எந்த வகையில் கவர வேண்டுமோ அந்த வகையில் கவருவார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குதான் பிரச்சனை, பாமக-விற்கு ஒன்றும் இல்லை.
அவர்களுக்கே தெரியும் இந்த தேர்தல் எப்படி நடைபெறும் என்று. பாமக-வின் ஓட்டு வங்கி எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்கள் இந்த இடைத்தேர்தலில் நிற்கிறார்கள்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. அதனால் பக்கத்து வீட்டில் பூத்த மல்லிகைப் பூவிற்கு மணம் இல்லை என்று கூற முடியாது. ராகுல் விடாமுயற்சியால் காங்கிரசை கட்டிக்காக்க முயற்சிக்கிறார். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று செல்லூர் ராஜு கூறினார்.
மேலும் பேசிய அவர், "திமுகவினர் வெற்றி பெற்ற மமதையில் பேசுகிறார்கள்.எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் திமுக தனித்து நிற்க தயாரா? அதிமுக போல் திமுக தனித்து நின்று அவரவர் செல்வாக்கை காண்பிக்கட்டும். மக்களிடம் உங்கள் சாதனையை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினும், திமுக தலைவர்களும் ஜெயலலிதா போன்று ஆணித்தரமாக முடிவெடுப்பார்களா ? சட்டமன்றத்தில் வருகின்ற திங்கட்கிழமை என்னுடைய உரை வருகிறது அப்போது பாருங்கள்" என்று செல்லூர் ராஜு மேலும் கூறினார்.
இதையும் படிங்க:தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: ஆதீன முன்னாள் உதவியாளர் சிறையில் அடைப்பு!