திருநெல்வேலி: நெல்லையில் கடந்த மே 4ம் தேதி கொடூரமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் வழக்கு போலீசாருக்கு சவாலாக இருந்து வருகிறது. கடந்த 13 ஆம் தேதி ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்த தென்மண்டல ஐஜி கண்ணன், வழக்கின் நிலையை விளக்கினார். அப்போது அவர், 'ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இடைக்கால உடற்கூறாய்வு அறிக்கை மட்டுமே தங்களுக்கு கிடைத்ததாகவும் டிஎன்ஏ உள்ளிட்ட முழுமையான அறிக்கை வந்த பிறகே பிற விவரங்கள் தெரியவரும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
நீளும் மர்மம்: மேலும், ஜெயக்குமார் வழக்கை விசாரிக்க டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தினரிடமும் அவர் எழுதியதாக கூறப்படும் கடிதங்களில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்பட 32 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
குறிப்பாக ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டபோது அவரது கை மற்றும் கால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டிருந்தன. மேலும், அவரது வாயில் இகுந்து பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் ஸ்க்ரப் எடுக்கப்பட்டது. எனவே ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பின்னர் கை, கால்களை கட்டி எரிக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். ஆனால் அதில் அவர்களால் உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை.