சென்னை:எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சிகிச்சை பெறும் குழந்தைகளின் உடன் வருவோருக்கான தங்கும் விடுதியின் கட்டுமானப் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu) அதன் பின்னர், செய்தியாளரை சந்தித்த அவர் ,"எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, தாய் சேய் நல மருத்துவமனை என இரு மருத்துமனைகளுக்கும் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர் தங்கும் வகையில் 4 தளங்களுடன் தங்கும் விடுதி 5.89 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் தலா 25 அறைகள் , சமையல் அறையுடன்கூடிய குளியலறை வசதியுடன் தங்கும் விடுதி கட்டப்படுகிறது.
2022 ம் ஆண்டு நடைபெற்ற கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியில் பதிவுக்கட்டணமாக பெறப்பட்ட 1.22 கோடி நிதி , நமக்கு நாமே திட்டம் மூலம் மீதத் தொகை ஒதுக்கப்பட்டு 5.89 கோடியில் இப்பணி நடைபெறுகிறது. இவ்விடுதியில் தரைத்தளத்தில் 100 பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் உணவருந்த முடியும். இரு மருத்துவமனைக்கும் வரும் பெற்றோர் சாலையில் படுத்துறங்கும் நிலையே இருந்தது. தற்போது அவர்களுக்காக இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவு நாளான வரும் 7ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் 6.17 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியால் திறக்கப்பட உள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதி மூலம் 30 கோடியில் பல மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. அதில் 10 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் , 20 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனைக்கும் வரும் 7 ம் தேதி வழங்கப்பட உள்ளன.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கட்டடம் 10.27 கோடியில் கட்டப்பட உள்ளது. 7ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதற்கான அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் ராயப்பேட்டை மருத்துவமனையில் 35 கோடியில் அவசர சிகிச்சைக்கான புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. மொத்தம் 46.8 கோடியில் புதிய கட்டடங்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் கட்டப்பட உள்ளன.
காவிரியில் நீர் அதிகம் செல்லும் நிலையில் கரையோர மாவட்டங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரிக் கரையோர மாவட்டங்களில் நேற்று 50 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தேவைப்பட்டால் கூடுதலாக முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளோம்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் சிசிடிவி காட்சி அடிப்படையில் ஒரு மணி நேரத்திலேயே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுவிட்டனர்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதையும் படிங்க: ஆய்வின்போது மிஸ் ஆன கலெக்டர்.. போன் போட்டு கடிந்த அமைச்சர்.. நெல்லையில் நடந்தது என்ன? - nellai collector karthikeyan