மதுரை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க துணைத் தலைவரும், திரைக்கலைஞருமான நடிகை ரோகிணி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதில், 2-ஆவது நாளாக நேற்று மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில், மக்களிடம் வாக்குகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
பரபரப்பான தேர்தல் பரப்புரைக்கு இடையே ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அப்போது திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவான தங்களது பரப்புரையில், மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த இரண்டு நாட்களாக மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறேன். நான் சென்ற இடங்களில் சு.வெங்கடேசன் செய்துள்ள நற்பணிகளை கவனத்தில் கொண்டு மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். இது சு.வெங்கடேசனின் வெற்றியை உறுதி செய்துள்ளதாகவே கருதுகிறேன். சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி, போட்டித் தேர்வுகளுக்குப் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கியுள்ள வாசிப்புப் பூங்கா ஆகிய பணிகளையெல்லாம் பெரிய விசயமாக நான் பார்க்கிறேன்.
நமது அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும் எதிர்காலமும் எப்படி இருக்கப்போகிறது? என்பதை உணர்ந்து உன்னிப்பாகக் கவனித்து இதனைச் செய்து கொடுத்த சு.வெங்கடேசன் குறித்து பெருமை கொள்கிறேன். இதே போன்ற உணர்வை கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கொண்டுள்ளார்கள் என்பதையும் அறிகிறேன். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் செய்துள்ள சாதனைகள் காரணமாக தமிழக மக்கள் மிகத்தெளிவான வெற்றியைத் தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
நமது பரப்புரைகள் மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்கின்ற செய்திகள்:இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களோடு ஒப்பிடும்போது, இந்தத் தேர்தலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எந்தவிதமான கருத்துரிமையும், வாழ்வுரிமையும் கிடையாது. நீங்கள் ஏதாவது பேசினீர்கள் என்றால் உங்களது குரல்வளையை நெரித்துவிடுவேன் என்பது மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை ஜனநாயகக் கொலை என்று தான் சொல்வேன். ஆனால், இதனை நாம் மட்டுமல்ல, மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் பொருட்டு அவர்கள் தெளிவான ஒரு முடிவை எடுப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால், அவர்கள் செய்வது அனைத்தும் விளம்பரத்திற்காகவே என்பதை எல்லோரும் புரிந்து கொண்டுவிட்டார்கள். இப்போது நாம் பரப்புரை செய்கிறோமென்றால், அவையெல்லாம் மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்கின்ற செய்திகள்.
அந்த நேரத்தில் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் நமது வீடுகளில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஆழ்கடலுக்குள் சென்று தியானம் செய்கிறோமா? அல்லது வீட்டில் அமர்ந்து தியானம் மேற்கொள்கிறோமா? அல்லது ஒரு பூசாரியைப் போன்று சாமிக்கு ஆரத்தி எடுக்கிறோமா? என்றால் இவையெல்லாம் அவரவர்களின் உரிமை.