சென்னை: பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழாவில் இன்று பேசிய விஜய் கூறியதாவது; ''கடந்த மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் சில குளறுபடிகள் நடந்துள்ளதை செய்திகளில் பார்த்தோம். இதனால் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை மக்களிடம் இருந்து போய்விட்டது. இதற்கு நீட் விலக்கு மட்டும் தான் உடனடி தீர்வாக இருக்கும். நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளது 1975 முன்னாள் வரை கல்வி மாநில பட்டியலில் இருந்தது. ஒன்றிய அரசு வந்தது பிறகு பொது பட்டியலில் அதை சேர்த்தார்கள். அதுதான் முதல் பிரச்சினை.
இரண்டாவதாக ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் இந்தத் திட்டம் என்பது கல்வி கற்பதற்கு நோக்கத்திற்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். மாநில உரிமைக்காக மட்டுமல்ல கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பார்வைகள் இருக்கிறது. அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிச்சயமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய பார்வை.. பன்முகத் தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல.
மேலும், நீட் ரத்துக்கோரி தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு எந்த கால தாமதமும் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நீட் விலக்கை அமல் படுத்த வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு தேசிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுவது கடினம்.