சென்னை: தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், நடிகர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூல் செய்து வருகிறது. தற்போது நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றி கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். நடிகர் விஜய் இது தொடர்பாக மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு, தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து செயல்படப் போவதாக அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார். அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், அவரது கட்சிப் பெயரில் பிழை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.
‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் வெற்றி என்ற இடத்தில் 'க்' சேர்த்து வர வேண்டும் எனக் கூறப்பட்டது. விமர்சனங்களைக் கேட்டிருந்த விஜய், தமிழ் அறிஞர்களோடு கலந்துரையாடி, அவர்களது அறிவுறுத்தலின்படி கட்சியின் பெயரில் க்-ஐ சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார், கட்சியின் பெயரில் உடனே திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சென்னை துறைமுகம் வந்தடைந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!