சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இதனையடுத்து விஜய் அரசியல் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இன்று தனது த.வெ.க கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகை மலர் இடம்பெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து த.வெ.க பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. "தமிழர் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது" என்று தொடங்கும் பாடல் தமிழர்கள் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உள்ளது.
தனது கட்சி அலுவலத்தில் கொடியை ஏற்றி வைத்த விஜய், பின்னர் பேசுகையில், "நான் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தேன். அப்போது முதல் கட்சி மாநாடு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தவெக முதல் மாநாடு குறித்து தகவலை உரிய நேரத்தில் அறிவிப்போம். இன்று மிகவும் சிறப்பான நாள், எனது தோழர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.