தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அந்த அணுகுண்டு விஜய்க்கு எதிராக வெடிக்கும்' - உடைத்து பேசும் திருமாவளவன்! - THIRUMAVALAVAN SLAMS VIJAY

பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை என்பதை அவர் உரை முழுவதும் உணர்த்துகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், தவெகவில் எதிர்பார்த்த கொள்கைகள் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

திருமாவளவன் பேட்டி, விஜய் கோப்புப்படம்
திருமாவளவன் பேட்டி, விஜய் கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2024, 7:06 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வின்னவனூர் பகுதியில் இன்று நடைபெற்ற விசிக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது, “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் நடிகர் விஜயிடம் இருந்து தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அவரது தொண்டர்கள் ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் பல்வேறு வியூகங்களுக்கு பதில் சொல்வதில் குறியாக இருந்தார். தனக்கு எதிரான விமர்சனங்களை குறித்து விளக்கம் சொல்வதிலேயே அதிக நேரத்தை எடுத்துக்கொண்டார்.

வெளிப்படை இல்லை:நண்பர்கள் யார் யார் என்று அடையாளப்படுத்துவதை விட, எதிரிகள் யார் என அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும், ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி என்றும் குறிப்பிட்டார். பிளவுவாத சக்திகள் என்று கூறுகிற பொழுது வெளிப்படையாக கூறவில்லை. குறிப்பிட்ட இந்த அமைப்புதான், கட்சிதான் என்று அடையாளம் காட்டவில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறுகிற பொழுது, ஒரு சமத்துவ அரசியலை முன்னெடுத்துள்ளார் என்று மகிழ்ச்சி அடையக் கூடிய நிலையில், பெரும்பான்மை, சிறுபான்மை என்று பேசுகிற அரசியலில் உடன்பாடு இல்லை என்கிறார். பெரும்பான்மை பற்றி பேசுபவர்கள் யார் என்று அடையாளப்படுத்த வேண்டியது தேவை.

இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பான்மை பேசக்கூடிய ஒரே கட்சி பாஜக மற்றும் துணை நிற்பது சங்பரிவார் அமைப்பு தான். இதனால் சிறுபான்மை சமூகத்தினர் எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க:2025 ஜூன் 31 வரை கெடு; ஓபிஎஸ்-க்கு வந்த புதிய சிக்கல்.. உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

பாசிசம்: சிறுபான்மையினர், பௌத்த மதத்தினர், முஸ்லிம்கள் மற்றும் சமண மதத்தை குறித்து என்ன முன்னெடுப்பு செய்துள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. பாசிசம் குறித்து பேசும்போது, பாசிசமா பாயாசமா என அதை இலகுவாக கடந்து செல்கிறார். பாசிச எதிர்ப்பு எங்கும் இல்லை, அதை பொருட்படுத்த தேவையில்லை என்று கடந்து செல்கிறார். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா என்று கேட்கிறார். அதில் இரண்டு பொருள்கள் உள்ளன. ஒன்று பாசிச எதிர்ப்பு ஒரு பெரிய விஷயம் இல்லை என்றும், நீங்களும் பாசிஸ்டுகள் தான், நீங்கள் ஒன்றும் ஜனநாயக சக்தி இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

உறுதியாக இல்லை:நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று அவர் திமுகவை மட்டும் கூறுகிறாரா அல்லது திமுக கூட்டணியில் உள்ள 28 கட்சிகளைக் கூறுகிறாரா என்று தெரியவில்லை. பாசிச எதிர்ப்பு தேவை இல்லை என்று கூறுவதால் பாஜக எதிர்ப்பு தேவை இல்லை என்று நினைக்கிறாரா? பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பதை அவர் உரை முழுவதும் நமக்கு உணர்த்துகிறது. அவரது உரை முழுவதும் திமுக எதிர்ப்பு நெடி காட்டுகிறது.

கொள்கைகள் இல்லை: திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கிறார். குடும்ப ஆட்சி என்று கருணாநிதி குடும்பத்தை எதிர்க்கிறார். இது ஒரு புதிய அரசியல் நிலைப்பாடு அல்ல. தமிழகத்தில் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் தான். இது மக்களிடத்தில் எடுபடவில்லை என்பது தான் வரலாறு உணர்த்துகிறது. நடிகர் விஜய் இடத்தில் எதிர்பார்க்கப்பட்ட கொள்கைகள் இல்லை.. அரசியல் பிரகடனம் இல்லை.. செயல் திட்டங்கள் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

கேள்விக்குறியாக உள்ளது:தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டு காலத்திற்கு முன்பே அதிகாரத்தில் பங்கு என அறிவித்ததால் வலை போடுவதற்கு முன்பே கல்லெறிவது போன்றதாகும். உண்மையிலேயே அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் விருப்பத்தோடு சொன்னதாக தெரியவில்லை. இந்த அறிவிப்பை ஏற்று எந்தெந்த கட்சிகள் வருவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

துணை முதல்வர் பதவி உண்டா அல்லது அமைச்சர் பதவிகள் மட்டும் தானா என்பதெல்லாம் குறித்து தீர்மானிக்கப்பட்ட பிறகு அறிவிக்க வேண்டிய அரசியல் யுத்தி. விஜய் வேண்டுமென்றே பேசுகிறார் என்றால் திமுக கூட்டணியில் சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி உள்ளார். அவரது பாணியில் சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு அணுகுண்டு. ஆனால், அது அவருக்கு எதிராக வெடிக்கும்'' என குறிப்பிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details