சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், அந்தக் கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என பெயர் மாற்றம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் இயங்கி வந்த கட்சி இன்றுமுதல் தேசிய அளவில் 'இந்திய ஜனநாயக கட்சியாக' இயங்கும். இது அனைவருக்குமான ஆட்சியாகவும். ஏழைகளின் இந்திர லோகமாக, சம உரிமையோடு இருக்கும். என் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை இதற்காகப் பாடுபடுவேன். எளியவர்களை ஆட்சியில் அமர வைப்போம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசியல் பயணம் குறித்து பேசிய மன்சூர் அலிகான், "சீமானுக்கு முன்பே (1992) நான் அரசியலுக்கு வந்து விட்டேன். 1999-ல் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்டு உள்ளேன். தொடர்ந்து அடுத்தடுத்து தேர்தல்களில் 2019-ல் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்டேன். 2024-ல் மிகப்பெரிய இயக்கமாக இந்த கட்சி பல தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்துவோம். எங்களுக்கு கப் தான் முக்கியம்" என்று கூறினார்.
இதனையடுத்து நடிகர் விஜய் ஒரு மாதத்தில் கட்சியைத் துவங்க இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "அவர் தற்போது GOAT படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். நாளைக்கு அவர் துவங்குகிறார் என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் இன்று துவங்குகிறோம். இப்போது தான் பிள்ளையார் சுழி போட்டுத் துவக்கி இருக்கிறேன்" என்று கூறி மீனவர்கள் தன்மானத்துடன் வாழ, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றைச் சுட்டிக் காட்டி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மேலும் பெரியார் துவங்கிய இயக்கத்தை திமுக பொறுப்பு எடுத்துச் செய்தாலும், இந்தியா முழுவதும் அவருடைய சமத்துவத்தைக் கொண்டு சேர்க்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. இப்போது பெரியாரின் சீடர்களாக நாங்கள் இருக்கலாம். இந்திய ஜனநாயக புலிகள் என்றாலும் தமிழ் புலிகளை நாங்கள் விடவில்லை. பிரபாகரனை மிஸ் பண்றேன். அவர் மாவீரர் தான். எங்கள் நோக்கம் கச்சத்தீவை வாங்கி தருவது தான். திராவிட கட்சிகளைத் தாண்டி மக்களிடம் நிச்சயமாகப் போவோம்" என்று கூறினார்.