கோயம்புத்தூர்:கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் இன்று (பிப்.14) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டார். அவரது வருகையின்போது, அரங்கத்தில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஆரவாரத்துடன் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய நடிகர் ஜெயம் ரவி, இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார். காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், என்னுடைய காதலர் தினத்தை விட்டு விட்டு இங்கு வந்துள்ளேன் எனக் கூறினார். மேலும், எனக்கு நீங்கள் அனைவரும் ஒரு உறவாக இருக்கிறீர்கள் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள். இப்போது இருக்கின்ற மாதிரி மகிழ்ச்சியாக இருந்தாலே, வருங்காலம் உங்களைத் தேடி வரும் எனத் தெரிவித்த அவர், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தப்பில்லை, ஆனால் வாழ்க்கையில் தேர்ச்சி பெறாமல் போனால்தான் தப்பு என அறிவுரை வழங்கினார்.
அவரிடம் காதலர் தினம் குறித்து கருத்து கேட்டதற்கு, 18 வயது நினைவுகளை நினைவு படுத்தினால் 18 வயதில் ஒரு இன்னசென்ஸ் இருக்கும், அது காதலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். காதல் அனைத்தையும் கடந்த ஒன்று, அனைவரையும் மதிக்க வைக்கிறது என்றார். 18 வயதில் ரசித்த காதல் பாடல் என்ன என்ற கேள்விக்கு, சிங்கிள் சைடு காதல் இருந்தபோது ரசித்த பாடல் என்னவென்றால் "மஞ்சம் வந்த தென்றலுக்கு" என்ற பாடல் என பதிலளித்து அந்தப் பாடலை பாடினார். திருமணம் குறித்த கேள்விக்கு, ஏன் திருமணம் செய்கிறோம் என்றால், உன்னுடைய வாழ்க்கையை உன்னுடன் வாழ்ந்த பெண் சொல்ல வேண்டும். அதுதான் வாழ்க்கை எனக் கூறினார்.