சென்னை: சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று (ஏப்.14) நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னணி திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை, எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.