திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜகான்(36). இவர் மீது கடந்த 2023ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த வழக்கில், திண்டுக்கல் காவல் துறையினர் போக்ஸோ வழக்கின் கீழ் கைது செய்தனர். இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இவர் மீது சுமத்தப்பட்ட வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட சிறைச்சாலையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ஷாஜகான், திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் உள்ள சிறப்பு போஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் வழக்கு குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது, திடீரென ஓடிவந்த ஷாஜகான் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஷாஜகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாஜகான் உயிரிழந்தார். நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் மீட்பு.. தென்மண்டல ஐஜி கூறுவது என்ன?