வேலூர்:வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம், “தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டில் ஒன்பது கட்சிகள் கூட்டணியாக இணைந்து போட்டிடுவதால் பாஜக அதிக அளவில் வெற்றி பெறுவோம். கடந்த 11 மாதங்களாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம், இளைஞர்களுக்கு விளையாட்டு ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
ஒன்பது கட்சியின் கூட்டணி மட்டுமல்லாமல், மக்களோடு கூட்டணி வைத்து போட்டியிடுகிறோம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வர உள்ளார். அதில் வேலூரிலும் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்வார்” என்றார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தழுதழுத்த குரலில் அழுதவாறு பேசியது குறித்த கேள்விக்கு, “தற்போது அழுவதை விட, அண்ணன் துரைமுருகன் எம்பியாக இருந்தபோது ஒவ்வொரு கிராமங்களுக்கும், ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று, அரசுத் திட்டங்களை நிறைவேற்ற சொல்லி இருக்கலாம். ஆனால், அந்தப் பகுதிகளுக்கு எம்பி தேர்வான பிறகு செல்லவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அப்படி மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டு, மத்திய மாநில அரசு திட்டங்களை நிறைவேற்றி இருந்தால், அதாவது வேலூர் நாடாளுமன்றத்தையே திருப்பிப் போட்டிருந்திருக்களாம். தொகுதியில் மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவில்லை.