திருப்பத்தூர்:நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் ஏ.சி.சண்முகம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஆலங்காயம் பகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஏ.சி.சண்முகம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து வந்த நிலையில், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஏ.சி.சண்முகத்தின் தேர்தல் பரப்புரைக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிர்வாகிகள் மற்றும், தொண்டர்கள் 7 மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து மூன்று மணி நேரமாக ஏ.சி.சண்முகத்தின் தேர்தல் பரப்புரைக்காகக் காத்திருந்துள்ளனர்.
10 மணி மேல் ஆனதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்தில் கூடாது என தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதால், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து 10:30 மணியளவில் வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு வந்த ஏ.சி.சண்முகம் காரில் இருந்தபடியே கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்துக் கைகுலுக்கி பின்னர் அங்கிருந்து சென்றார். இதனால் ஏ.சி.சண்முகத்தின் பரப்புரைக்காக 3 மணி நேரம் காத்திருந்த கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 2வது நாளாக நீடிக்கும் ஐடி ரெய்டு.. நெல்லையில் பரபரப்பு - Lok Sabha Election 2024