சென்னை: தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டில் சேர்வதற்கு மே 6ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி உள்ள நிலையில், கடைசி நாளான இன்று (மே 24) மட்டும் 5,865 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்தாண்டைப் போலவே மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்தப்பின்னர், ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 27ந் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. அந்த தர வரிசையின் அடிப்படையில் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 6ஆம் தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்காக சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.