சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் பதிவு மூப்பு வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஒரு ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர் வேறு ஒன்றியத்திற்கு அல்லது வேறு மாவட்டத்திற்கோ பணியிட மாற்றம் பெற்றுச் செல்லும் பொழுது, அந்த மாவட்டத்தில் ஜூனியராக பணியில் சேர வேண்டும். இதனால் அவருக்கு பதவி உயர்வு போன்ற சலுகைகள் பெறுவதில் இழப்பு ஏற்பட்டு வந்தது.
இதனை மாற்றும் வகையில், பள்ளிக் கல்வித்துறையில் உள்ளது போல் மாநில அளவிலான பதிவு மூப்பு நிர்ணயம் செய்து அரசாணை 243 மூலம் அனுமதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தொடக்க கல்வித்துறையில் முதல் முறையாக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில அளவில் பணி நியமன வரன்முறை செய்யப்பட்டு, பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.
அந்த பட்டியலின் அடிப்படையில், பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டன. இந்த அரசாணை மூலம் தொடக்கக் கல்வித்துறையில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் 1,245 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.