சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 28 ஆயிரத்து 824 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடற்ற மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை ஏற்படுத்திட, தமிழ்நாடு முதலமைச்சர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தில் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அடுக்குமாடிக் குடியிருப்புகள்: திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல், இதுநாள் வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 92 திட்டப் பகுதிகளில் 3,197.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 28,824 அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு வீடற்ற ஏழை எளிய மக்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு:தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 37,720 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல 3,023 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான விற்பனைப் பத்திரங்கள் மற்றும் 1,733 மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கும் விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டம்: மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 495 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 89 ஆயிரத்து 429 பயனாளிகளுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. மேலும், மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2,078.37 கோடி திட்டமதிப்பீட்டில் 69,701 புதிய தனி வீடுகள் கட்டுவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.