சென்னை:தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒரே நேரத்தில் பல்வேறு மணல் குவாரிகள் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
மணல் குவாரிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு, அதில் கிடைக்கப் பெற்ற வருவாயைக் கணக்கில் காட்டாமல் பரிமாற்றங்கள் செய்யப்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, கரூர் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட மணல் குவாரி அதிபர் கரிகாலன் என்பவர் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல், திண்டுக்கல் மாவட்ட தொழிலதிபர் ரத்தினம் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், ஆடிட்டர் சண்முகராஜன் தொடர்புடைய இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள், குவாரிகளில் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களைத் திரட்டி, குறிப்பிட காலகட்டத்தில் சட்டவிரோதமாக எவ்வளவு மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வுகளைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத் துறையின் இந்த ஆய்வில் முதல் கட்டமாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 128 கோடி மதிப்பில் 209 மணல் அள்ளும் இயந்திரங்கள் என அசையும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணல் குவாரியில் இடைத்தரகராக செயல்பட்ட சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா, ரத்தினம் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களின் 35 வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இந்த வங்கிக் கணக்கில் இருந்த 2.25 கோடி ரூபாயும் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் குவாரிகளுக்கு நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை உடன் அழைத்துச் சென்று எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது, அனுமதி மீறி எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளது, கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து ஆய்வுகள் செய்தனர்.
மேலும், அதன் மூலம் எவ்வளவு வருவாய் கிடைக்கப் பெற்றது, எவ்வளவு வருவாய் மறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விவரங்களையும் சேகரித்து வந்தனர். இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைகள் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஓசூர்-ஓமலூர் ரயில் பாதையை மேம்படுத்த 100 கோடி ரூபாய்.. தருமபுரி எம்பி செந்தில்குமார் நெகிழ்ச்சி!