விழுப்புரம்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வாழைப்பந்தல் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 20 நபர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, செவ்வாய்கிழமை இரவு அன்று ஊர் திருப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேட்டத்தூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் வேனில் பயணம் பெய்த செய்த 20 நபர்களும் பலத்த காயமடைந்தனர். இதில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர், விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூர் காவல்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை ரோந்து மீட்புப் படையினர், உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:கிளாம்பாக்கம் அருகே கடைக்குள் புகுந்த ஆம்னி பேருந்து; உயிர் தப்பிய பயணிகள்!
மேலும், விபத்தில் காயமடைந்த 14 நபர்களை மீட்டு, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, விபத்து குறித்து திருநாவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், விபத்தில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்தும், விபத்தில் உயிரிழந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், விபத்து நடந்த இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதாலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்று இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர். எனவே, இறந்த ஆறு நபர்களின் உடல் மீண்டும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.