சென்னை:தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வின் மூலம் 836 இடங்கள் நிரம்பியுள்ளது. சிறப்பு பிரிவில் உள்ள 9 ஆயிரத்து 639 இடங்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வின் மூலம் 836 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அதில் ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி, ஜூன் 12ஆம் தேதி வரை நடந்தது. இதில் மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது. சிறப்பு பிரிவினர்களான விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22, 23ஆம் தேதிகளிலும், சிறப்பு பிரிவினர்களுக்கு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமும் நடைபெற்றது.
இந்நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் 30 ஆயிரத்து 699 மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கட் ஆப் 200 முதல் 179 வரை உள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளி மணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண் 179 வரையில் பெற்ற 1,343 மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ராணுவனத்தினரின் வாரிசுகள் பிரிவில் 149 இடங்களில் 146 இடங்களும், விளையாட்டு வீர்களுக்கான 494 இடங்களில் 409 இடங்களை தேர்வு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான 8 ஆயிரத்து 996 இடங்களில் 281 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். தொழிற்கல்விப் பிரிவில் கட்ஆப் மதிப்பெண் 85 வரையில் பெற்ற 2 ஆயிரத்து 267 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.