கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், சாதாரண கூட்டத்திற்கு முதல் நாள் 200க்கும் மேற்பட்ட தீர்மானங்களை அனுப்பினால் அதை படிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லை என தெரிவித்து துணை மேயரிடம் முறையிட்டார்.
இந்த கூட்டத்தில் 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் இரு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல மத்திய நிதி நிலை அறிக்கையானது பீகார், ஆந்திர மாநில தேர்தல் ஒப்பந்தம் போல இருப்பதாகவும், தேர்தல் கணக்கை நிதிநிலை அறிக்கை மூலம் தீர்த்துக் கொள்ள பாஜக அரசு முயன்றிருப்பது வேதனைக்குரியது எனவும், நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப் 6 - 17 வரை கட்டுக்கடங்காமல் தீப்பற்றிய நிலையில், இந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மாமன்றத்தின் பார்வைக்கு ஒப்புதல் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. மொத்த செலவு ரூ.76,70,318 காட்டப்பட்டது. இதில் உணவு, டீ , காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 கணக்கு காட்டப்பட்டது. இதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.