தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி அதிக நேரம் ரயில்வே கேட்டில் வெயிட் பண்ண தேவையில்லை.. மதுரையில் 23 இடங்களில் முக்கிய மாற்றம்! - Madurai Railway Gates

Railway gate: ரயில் பாதையும், சாலையும் சந்திக்கும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டுகளில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 23 லெவல் கிராஸிங்கில் மின்சார ஆற்றல் கொண்ட கதவுகளாக மாற்றப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Railway Crossing gate
ரயில்வே கிராஸிங் மின்மயமாக்கல் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 10:12 PM IST

மதுரை: ரயில் பாதையும், சாலையும் சந்திக்கும் இடங்களில் விபத்துக்களை தவிர்க்க ரயில்வே கேட்டுகள் அமைக்கப்படுகின்றன. அந்த ரயில்வே கேட்டுகள் பழைய காலத்தில் கதவு போன்ற அமைப்புகளில் இருந்தன. இருபுறமும் அவற்றை திறப்பதற்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக சாலையில் ரயில் பாதை இருபுறமும் ஒரே நேரத்தில் ஏறி இறங்கும் வகையில் நீண்ட இரும்பு பைப்புகள் கொண்ட கேட்டுகள் அமைக்கப்பட்டன.

இவற்றை ரயில்வே ஊழியர் மனித ஆற்றல் மூலம் தன் அருகில் உள்ள சக்கரம் போன்ற அமைப்பை சுழற்றி கேட்டுகளை மூடவும், திறக்கவும் செய்வார். மனித ஆற்றலால் செயல்படுவதால் காலதாமதம் ஏற்பட்டு, இருபுறமும் உள்ள சாலையில் வாகனங்கள் ரயில் பாதையை கடப்பது சிரமமாக இருந்து வருகிறது.

இதனைத் தவிர்க்க, மதுரை கோட்டத்தில் 23 கேட்டுகள் மின்சார ஆற்றல் மூலம் இயங்கும்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 நொடிகளில் கேட்டுகளை திறக்கவும், மூடவும் முடியும். ரயில்வே ஊழியர் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் ரயில்வே கேட் இரும்பு பைப்புகளை எளிதாக ஏற்றி இறக்கி சாலைப் போக்குவரத்தை நிறுத்தவும், அனுமதிக்கவும் முடியும்.

இதனால் ரயில் கடந்த பிறகு சாலையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. விபத்துக்கள் இல்லாமலும் ரயில்களை வேகமாக இயக்க முடியும். மின்சார ஆற்றல் மூலம் இயக்கப்படும் இந்த கேட்டுகள் 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகின்றன.

வாகன ஓட்டுனர்கள் கவனக்குறைவாக வேகமாக வந்து ரயில்வே கேட்டுகளில் மோதி சேதம் ஏற்படுத்துவது உண்டு. தற்போது அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார ஆற்றல் ரயில்வே கேட்டுகள் சேதமடைந்தால், கவனக்குறைவாக செயல்பட்ட வாகன ஓட்டுநர்களிடம் இருந்து 2.5 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை பழுதுபார்ப்பு செலவு வசூலிக்கப்படும்.

எனவே, வாகன ஓட்டுநர்கள் ரயில்வே கேட்டு அடைத்திருக்கும் போது உரிய இடைவெளியில் வாகனங்களை நிறுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நிதியாண்டில் மேலும் 100 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்; பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!

ABOUT THE AUTHOR

...view details