தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பள்ளி கட்டுமானத்திற்காக மேலும் 91 சென்ட் வழங்கிய ஆயி அம்மாள்! ஜனனியின் நினைவு வளாகம் என பெயர் சூட்ட கோரிக்கை! - madurai news

pooranam ammal : மதுரை மாவட்டத்தை சேர்ந்த பூரணம் அம்மாள், கொடிக்குளம் அரசுப் பள்ளி விரிவாக்கத்துக்காக மேலும் ரூ.3.5 கோடி மதிப்பிலான 91 செண்ட் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.

aayi pooranam ammal
ஆயி பூரணம் அம்மாள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 8:18 PM IST

Updated : Feb 5, 2024, 11:09 PM IST

மதுரை:மதுரை மாவட்டம் யா.கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஆயி என்கிற பூரணம் அம்மாள். இவர் தல்லாகுளத்தில் உள்ள கனரா வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் தனக்குச் சொந்தமான 1.52 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கல்வித்துறைக்குத் தானமாக வழங்கியிருந்தார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு 7.5 கோடி ரூபாய் ஆகும்.

இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உட்படப் பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.

இதுகுறித்து அப்போது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த ஆயி அம்மாள், "கல்விக்காக நான் தானமாக கொடுத்த செயல் இவ்வளவு பிரபலமாகும் என நினைக்கவில்லை. மற்ற உதவிகளைக் காட்டிலும் கல்விக்காக செய்த உதவியை அனைவரும் பாராட்டுவது நிறைவாக இருக்கிறது.

கொடிக்குளம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும், மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த வேண்டும் என்ற எனது மகளின் எண்ணத்தின் படி நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளேன். வரும் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியை துவங்கிட வேண்டும் என்று தனது மகள் பெயரைப் பள்ளி கட்டிடத்திற்கு வைக்க வேண்டும்.

மேலும் அனைவரும் அவர்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும், பணமாக மட்டும் தான் என்று கிடையாது, பொருளாக, உடல் மூலம் நிறைய உதவிகளை செய்ய வேண்டும், என்னுடைய உயிர் உள்ள வரை உழைத்து என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டே தான் இருப்பேன்" எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறைக்குத் தானமாக வழங்கிய நிலத்தின் அருகிலேயே அவருக்குச் சொந்தமான 91 சென்ட் நிலம், சிலரால் தவறாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்த ஆயி அம்மாள், அந்தப் பெயர் மாற்றத்தை ரத்துச் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 91 சென்ட் உள்ள அந்த நிலத்தைப் பள்ளிக் கல்வித் துறைக்கே தானமாக ஆயி என்கிற பூரணம் அம்மாள் எழுதி வழங்கி உள்ளார். தற்போது வழங்கப்பட்ட இந்த நிலத்தின் சந்தை மதிப்பு மட்டும் சுமார் ரூ.3.5 கோடி எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை உயர்நிலைப்பள்ளி கட்டுவதற்காக, பள்ளிக் கல்வித்துறைக்கு பூரணம் அம்மாள் தானமாக அளித்துள்ளார்.

மேலும் பூரணம்மாள் வழங்கிய தானப் பத்திரத்தில், ஜனனியின் நினைவாக தானமாக வழங்கிய இடத்தில் பள்ளிக்காக கட்டிடம் கட்டும்பொழுது 'ஜனனியின் நினைவு வளாகம்' என்ற பெயர் சூட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன் என ஆயி என்ற பூரணம் அம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:“பள்ளிக்கு என் மகள் பெயர் வைக்க வேண்டும்” முதலமைச்சர் விருது பெற்ற ஆயி பூரணம் அம்மாள் கோரிக்கை!

Last Updated : Feb 5, 2024, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details