சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "ஒரு தலித் தலைவராக உருவாகி இன்று அந்த குறிப்பிட்ட சமூகத்தைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவருக்காக நியாயம் கேட்கும் அளவிற்கு அவர் அனைவருக்குமானவராக உயர்ந்தார். மேலவளவு முருகேசன் தொடங்கி, தலித் தேர்தல் அரசியலுக்குள் நுழையும் ஆம்ஸ்ட்ராங் வரை படுகொலை செய்யப்படுவதைச் சுலபமாகக் கடந்து செல்ல முடியாது.
ஒரு தலித் அரசியல் தலைவர் உருவாகக் குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும்போது, இதுபோன்ற படுகொலைகள் எளிய மக்கள் அரசியலுக்கு எதிரான நேரடி அச்சுறுத்தல். ஆம்ஸ்ட்ராங் படுகொலையையும் காவல்துறை இந்த கோணத்தில் விசாரிக்க வேண்டும். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு வேண்டி சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது.
அதேபோல், விளிம்புநிலை மக்களுக்காகப் போராடும் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு விரைவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஒருசிலர் ஆம்ஸ்ட்ராங்கைக் கட்டப்பஞ்சாயத்து செய்பவர், ரவுடி என்று சொல்வதற்கு முதலமைச்சரே நேரடியாகப் பதில் சொல்லியிருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் குற்றப் பின்னணி இல்லாதவர்: குற்றப் பின்னணியில் இருக்கும் ஒருவரது வீட்டிற்கு இரங்கல் சொல்ல முதல்வர் செல்ல முடியாது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்குச் சென்றது மட்டுமின்றி, அவர் மீது எந்த புகாருமில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர், பாமக, பாஜக எனப் பல்வேறு கட்சியினரும் அவர் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார்கள்.
சாதியை அழித்தொழித்தல் என்று அம்பேத்கர் கூறியபடி அரசியல் அதிகாரத்தில் அதற்காகப் போராடும் தலைவர்கள் கொலை செய்யப்படுவது இன்றைய சூழலை உணர்த்துகிறது. ஏனெனில், வேங்கைவயல் சம்பவத்திற்கு இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது, படித்ததற்காக மாணவர் சின்னதுரை மீதான தாக்குதல் போனற சூழல் நிலவும்போது காவல்துறை ஒரு மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டும்" எனக் கூறினார்.