சென்னை: சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், அப்போதையை விசிக துணைப் பொதுச் செயாலாளர் ஆதவ் அர்ஜுனா ஆளுங்கட்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து, விசிக சார்பில் ஆதவ் அர்ஜுனாவிடம் இது குறித்து கேள்வி கேட்கப்படும் என்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று (டிசம்பர் 15) விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்று ஆதவ் அர்ஜுனா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விசிக தலைவர் திருமாவளவனின் வார்த்தைகளுக்கு நான் கட்டுப்படுபவன். அவரின் வாழ்த்துக்களையும், அன்பையும் அட்வைஸாக எடுத்துக் கொண்டு அவருடன் பயணிப்பேன்," என்றார்.
இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் கூறியதை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், "இன்னும் கொஞ்சம் நாளில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனையும் சங்கி என சொல்லிவிடுவார்கள்.
அவருடைய கருத்துக்கு நான் உடன்படுகிறேன். வருங்காலத்தில் புதிய அரசியலை உருவாக்க வேண்டும். அந்த புதிய அரசியலில் "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்ற கொள்கையை முன்வைத்து இருக்க வேண்டும். இது தான் என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அதை பேசியதற்கு எனக்கு பனிஷ்மென்ட் கிடைத்தது. இந்தக் கொள்கையை எனது பயண பிரச்சாரத்தில் உருவக்குவேன்.
திருமா அண்ணன் என் மீது வைத்துள்ள விமர்சனத்தை அட்வைஸாக பார்க்கிறேன். கள அரசியல்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டவன் நான். எனக்கு அவர் எப்போதும் ஆசான். கொள்கை சார்ந்த அரசியலில் அவருடன் எப்போதும் எனது பயணம் இருக்கும். இன்றைக்கு எந்த கட்சியில் இணைய வேண்டும் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பதை தீவரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் என்னுடன் பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை அழித்துவிடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!
சாம்சங் தொழிலாளர்களுடன் இணைந்து போராடினால் நக்சலைட் என்பார்கள். மழை வெள்ளத்தில் மக்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் சங்கி என சொல்வார்கள். இவ்வாறு என் மீது வைக்கப்படும் விமர்ச்சனங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு என் பயணத்தின் மூலம் பதில் சொல்லப்படும்.
ஆதவ் அர்ஜுனா பேட்டி (ETV Bharat Tamil Nadu) ஒரு காலத்தில் பெரியார், அம்பேத்கர் மீதும் பல சந்தேகங்கள் எழுப்பபட்டது. அப்போது அவர்கள் வாழ்க்கை பணத்தின் மூலம்தான் பதில் சொன்னார்கள். எனவே நான் விமர்சனம் செய்பவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய பயணத்தின் மூலம் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களையும் அண்ணாவின் தேர்தல் அரசியலையும் கொண்டு ஒரு புதிய மாற்றத்தை அரசியலுக்குள் உருவாக்கும்போது, மக்களின் நம்பிக்கை முழுமையாக எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். எதிர்கால பயணம் குறித்து கூடிய விரைவில் செய்தியாளர்களை சந்தித்து கண்டிப்பாக சொல்கிறேன் ” என்றார்.