தூத்துக்குடி:தூத்துக்குடி சங்கு காலனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த களஞ்சியம் - கணேஷ்வரி தம்பதிக்கு, 5 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருந்தனர். அவர்களுள் இரண்டு மகன்களுக்கு திருமணமான நிலையில், மற்ற மூன்று பேர் கடல் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், கணேஷ்வரி தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடல் தொழில் செய்து வரும் இவரது கடைசி மகனான மாரிசெல்வம் என்ற அசால்ட் (24) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, காளிதாஸ் மற்றும் அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த சேது மகன் ஆகாஷ் உள்ளிட்டோருக்கும் கடந்த ஜூன் 21ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பிரபு மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் மாரிசெல்வம் வீட்டிற்குச் சென்று ஆள் வைத்து தூக்கி விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், ஜூன் 22ஆம் தேதி முதல் மாரிசெல்வம் காணவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து மாரிசெல்வத்தை அடித்து ஓட, ஓட விரட்டியதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், மாரிசெல்வம் குடும்பத்தினர் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், காணாமல் போன மாரிசெல்வம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, கடந்த திங்கள் அன்று மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாரிசெல்வத்தின் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.