தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை வைத்தியநாதபுரத்தில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் மனோகரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். முன்னாள் ராணுவ வீரரின் இறுதி ஊர்வலம் நேற்று (மே 8) மாலை நடைபெற்றது.
அப்பொழுது, அதே பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் அவரது அண்ணன் சூர்யா ஆகிய இருவரும் சேர்ந்து வெடி போடும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெடி போட்டதாகக் கூறி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவர்களைக் கண்டித்ததாகவும், இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இறந்தவரின் உடலை அடக்கம் செய்த பின்பு வெடி போட்ட அருண் மற்றும் அவரது அண்ணன் சூர்யா ஆகிய இருவரும் தங்களைக் கண்டித்தவர்களை அரிவாளைக் கொண்டு தாக்க முற்பட்டதாகவும், இதனால் வெடி போட்ட போது கண்டித்த இளைஞர்களுக்கும் சகோதரர்களான அருண் மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் அருண் என்ற இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் தப்பி ஓடியதாகவும், இதனைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த அருணின் அண்ணனான சூர்யா பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்குச் சென்று தனது தம்பியை அரிவாளால் வெட்டி, பலமாக தாக்கியதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.