கோயம்புத்தூர்:கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டி வீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது 18 வயது மகன் பிரணவ். இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பிரணவ் இன்று காலை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஒண்டிபுதூர் பேருந்து நிறுத்தம் முன்பாக தனது தோழி ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென பிரணவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் படுகாயம் அடைந்த பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, பிரணவை வெட்டிய இளைஞர் அங்கிருந்த மேம்பாலம் வழியாகத் தப்பி ஓடினார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியிலிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் பிரணவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கொலையாளி குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.