கோயம்புத்தூர்:வேலூர் மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்தவர் அருள்மொழி என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (23). பி.எஸ்.சி பட்டதாரியான இவர், வேலைத்தேடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்ச்செல்வன் கடந்த பிப்.25ஆம் தேதி தனது நண்பர்களோடு வேலூரில் இருந்து கிளம்பி, கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்காக பூண்டி வந்துள்ளார்.
இதையடுத்து, நேற்று (பிப்.26) அதிகாலை 1 மணி அளவில் மலை ஏறிய தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள், அதிகாலை 5 மணியளவில் 6வது மலைக்கு வந்துள்ளனர். அந்த 6வது மலையில் அதிகளவு பனிப்பொழிவு இருந்ததாகத் தெரிகிறது. இதனால், திடீரென தமிழ்ச்செல்வனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள் அவரை ஓரத்தில் அமரவைத்து முதலுதவி அளித்துள்ளனர். அப்போது திடீரென தமிழ்ச்செல்வன் மயங்கி விழுந்துள்ளார். இந்த நிலையில், மலை ஏற்றத்திற்காக வந்த மருத்துவர் ஒருவர் தமிழ்செல்வனைப் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.