புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன் (21). இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினரின் 14 வயது மகளை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தன்னை கேலி செய்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்ததையடுத்து முருகனை, அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வைத்து சிறுமியின் தந்தை கண்டித்துள்ளார்.
அப்போது முருகன் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன், தனது வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து சிறுமியின் தந்தையை நேற்று முன்தினம் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த கொலைக்கு மூளையாகச் செயல்பட்டது முருகனின் நண்பர் சுரேஷ் தான் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க :அக்.8 இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்; என்ன ஸ்பெஷல்?
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொன்னமராவதி துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், திருமயம் தாசில்தார் புவியரசன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின், சுரேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தபோது போலீசாரின் பிடியிலிருந்து அவர் தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. முருகன் தப்ப முயன்றபோது, கீழே விழுந்ததால், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்