திருப்பூர்: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ராவ் மற்றும் ராணி பாய் தம்பதியின் மகளான 17 வயது சிறுமி 10ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அடுத்த அண்ணாநகர் பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் சந்தோஷ் (24) என்பவருடன் பழகியுள்ளார். இதனிடையே, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதில், இருவரும் தப்பி ஓடி திருமணம் செய்ய முயற்சித்துள்ளனர். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியைக் கடத்த முயன்றதாக சந்தோஷ் மீது புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், சந்தோஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனிடையே, சந்தோஷ் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளதை அறிந்து கொண்ட அந்த சிறுமி, கோவையிலிருந்து வந்து மீண்டும் தான் சந்தோஷ் உடனே இருந்து விடுவதாக அடம் பிடித்துள்ளார்.
அதன் பின்னர், சிறுமியை சமாதானம் செய்த சந்தோஷ் 18 வயது பூர்த்தியாகும் வரை பொறுமையாக இருக்கச் சொல்லி அறிவுரை கூறி பெற்றோர் வீட்டிலேயே சிறுமியை விடுவதற்காக திருப்பூரில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்தில் அழைத்து வந்துள்ளார். ஆனால் சிறுமி பெற்றோரின் வீட்டுக்குச் செல்ல மறுத்து, தொடர்ந்து அடம்பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.