சென்னை: 'உங்களை தேடி உங்கள் ஊரில்' (Ungalai Thedi Ungal Ooril) திட்ட முகாம் குன்றத்தூர் நகராட்சி அலுவலக வளாகத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். இதில், குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டுகள், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மனுக்களை அளித்தனர்.
அப்படி பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 32 மகளிர் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், 10 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன் உதவிகளை வழங்கினார்.