தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கடை அருகில் பார் வசதி இல்லாமல் செயல்பட்டு வந்ததால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் ஒப்பந்தம் விடப்பட்டு, அரசு மதுபானக் கடை அருகே மது குடிப்போருக்கான பார் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையில் பணியாற்றி வரும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜா மற்றும் ஸ்டாலின் என்ற காவலர் இருவரும் இரவு 10 மணிக்குச் சென்று பணம் கொடுக்காமல் காவலர் என்று கூறி, மது வாங்கி குடித்துவிட்டு மீண்டும் மது பாட்டில் தரக் கூறியும், பணம் கேட்டும் மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் பாரில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் மது போதையில், போதை தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "என் பெரு ராஜா, நான் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு சார்பு ஆய்வாளர். இந்த மாவட்டத்திற்கு நான் தான் பொறுப்பு. உனக்கு விதி விளையாடுது தம்பி, நான் ஒரு கைதியைத் தேடி வந்தேன், போதை தடுப்பு காவலர் என்பதால், பாரில் ஆய்வு செய்ய வந்தேன்" என மது போதையில் கைலி வேட்டியுடன் சென்று, உரிமம் பெற்று பார் நடத்தும் நபர்களை மிரட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.