கன்னியாகுமரி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சில இடங்களில் அரசு பேருந்துகளில் பயணிகள் குடை பிடித்தபடி பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது ரயிலிலும் இதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், மழையின் காரணமாக ஒழுகிய வீடியோ வைரலாகி வருகிறது. தென் மாநில அளவில் அதிக வருவாய் கொண்ட ரயிலான கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். தென்னக ரயில்வே திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் இயங்கும் இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு அண்மைக் காலங்களில் சோதனையாகவே உள்ளது. முறையாக ரயிலை பராமரிப்பு பணி செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
கடந்த காலங்களில், சென்னையில் இருந்து ரயில் கன்னியாகுமரி வந்ததும், பயணிகளை இறக்கி விட்டு நாகர்கோவில் ரயில் நிலையம் வந்து சேரும். அங்கு ரயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் நிரப்பிய பின் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பிற்பகலில் கன்னியாகுமரிக்குச் சென்று, அங்கு இருந்து 5.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் செல்லும்.