கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வில்லோனி அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் 74 மலைவாழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ராஜ் என்பவரின் மகன் ரவி (56), மலைவாழ் மக்களின் வன பாதுகாப்புச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில், ரவி நேற்று இரவு 8 மணி அளவில் சக நண்பர்களான விஜயன், ராமச்சந்திரன், முருகானந்தம், தர்ஷன், கண்ணன் உள்ளிட்ட ஆறு பேருடன் வீட்டின் அருகில் உள்ள அடர்ந்த காட்டு வழியில் சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியில் ஒற்றைக் காட்டு யானை நின்றுள்ளது. ரவியின் சக நண்பர்கள் மூன்று பேர் முன்னோக்கிச் சென்றிருந்த நிலையில், அவர்கள் பின்னாடி ரவி நடந்து சென்றுள்ளார். அப்போது யானையைப் பார்த்த அனைவரும், அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். இதில் ரவி மட்டும் ஒற்றைக் காட்டு யானையிடம் மாட்டிக் கொண்டதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, யானை ரவியைத் தாக்கியதில், அவரது மார்பு, முகம், கை, கால்களில் முறிவு ஏற்பட்டு, பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதில் விஜயன், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் யானையைக் கண்டு ஓடிய போது, தவறி விழுந்ததில் விஜயனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரனுக்கு கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள், காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனிடையே, அனைவரும் யானையிடமிருந்து தப்பித்து விட்டார்கள் என நினைத்து எல்லோரும் சந்தித்த போது ரவி மட்டும் காணவில்லை.