திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து களக்காடு போலீசார் அளித்த தகவலின்படி 'திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). பாத்திர வியாபாரியான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் முத்துலட்சுமி (19) களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு படித்து முடித்து நீட் தேர்வு எழுதுவதற்காக நெல்லையில் உள்ள தனியார் பயிற்சி மையம் ஒன்றில் பயின்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நீட் தேர்வின் முதல் முயற்சியில் வெற்றி பெறாத முத்துலட்சுமி, இரண்டாவது முறையாகவும் இந்த ஆண்டு வேறொரு பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்று வந்துள்ளார். இத்தகைய சூழலில் கடந்த சில நாட்களாக முத்துலட்சுமி பயிற்சி மையம் செல்ல விருப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், வீட்டில் பெற்றோர் ஒழுங்காக பயிற்சி மையத்திற்கு சென்று படித்து தேர்வில் வெற்றி பெறும்படி மாணவிக்கு அறிவுறுத்தியதாகவும், ஆனால் மாணவி தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இன்று (நவ.06) காலை மணிகண்டன் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றபோது, வீட்டில் உள்ள அறையில் இருந்த மாணவி முத்துலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த அவரது தாயார் கூச்சலிடவே அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் முத்துலட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், அங்கு முத்துலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்'.