தஞ்சாவூர்:தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி சார்பில், ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சி தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் (பழைய மாவட்ட ஆட்சியர் வளாகம்) நேற்று (பிப்.21) தொடங்கி நாளை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியின் வண்ணக் கலைத்துறை, காட்சி வழி தகவல் வடிவமைப்பு துறை, சிற்பக் கலைத்துறை ஆகிய துறைகளில் பயிலும் 220 மாணவர்களின், 400-க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகளான ஆயில் கலர், அக்ரிலிக் கலர், நீர் வண்ண ஓவியங்கள், மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோக சிற்பங்கள், விழிப்புணர்வு போஸ்டர்கள், புகைப்படங்கள் மற்றும் கணினி ஓவியங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கண்காட்சியின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதில் துணி கட்டி சாயமிடுதல், பயிற்சியினை கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி பேராசிரியர் ராதா குழுவினர், காகித பொம்மை ,பொம்மலாட்ட பயிற்சியை பேராசிரியர் அருள் அரசன் குழுவினர், களிமண் சிற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புகைப்பட நுணுக்கங்கள் குறித்த பயிற்சியினை பேராசிரியர் அருண், பேராசிரியர் லிவிங்ஸ்டன் குழுவினர் உள்ளிட்டோர் இணைந்து வழங்குகின்றனர்.
இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கலைப் பொருட்களும் விற்பனையும் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, கண்காட்சியில் சிறந்த கலைப் படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், "மாணவர்களின் கலைப் படைப்புகள் வெகு சிறப்பாகவும், பல தகவல்களை வழங்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இவர்களின் படைப்புகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு பாரம்பரிய கலையை புதிய வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. இந்த கண்காட்சி மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.